இந்த வலையதளத்தில்உள்ள நல்ல செய்திகள்என்னைச் சார்ந்தபல நண்பர்களுக்குசென்றடைய வேண்டும்என்ற நோக்கத்தில்தான்உருவாக்கப்பட்டது. இதுவரைநான் பதிவிட்டபதிவுகளும், இனிபதிவிடப்போகும்பதிவுகளும் எனதுசொந்த படைப்புகள்அல்ல. பல பதிவர்கள்எழுதிய நல்லபதிவுகளைத்தான்இங்கு தொகுத்துள்ளேன்.

வியாழன், 11 டிசம்பர், 2014

31 அடிமாடுகளை மீட்கும் 'அமெரிக்க' இளைஞர்!

டிமாடுகளாக விற்கப்படுகின்ற நாட்டு மாடுகளை தடுத்து, அவர்கள் கேட்கும் விலைகொடுத்து வாங்கிவந்து, தனது கோசாலையில் பராமரித்து வருகிறார் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச்சேர்ந்த இளைஞர் வி.சிவக்குமார்.

"எம்.பி.ஏ.படிக்க அமெரிக்கா போனவன். படிச்சு முடிச்சு பட்டத்தை வாங்கியதும் அங்கேயே ஒரு வேலையில சேர்ந்து செட்டில் ஆயிட்டேன். 18 வருஷம் அமெரிக்காவில் இருந்தேன். அங்கு இருக்கிற போது, கூட வேலை பார்க்கிறவங்களுக்கு எல்லாம் கிளைமேட் சேன்ச், குடிநீர் மாற்றம் போன்றவைகளினால் ஏதாவது உடல் நல பிரச்னை வந்து போயிட்டிருக்கும். ஆனா, எனக்கு மட்டும் சிறு ஜலதோஷம் கூட வந்தது கிடையாது. இது ஏன்? என்று யோசித்தபோதுதான் அதற்கான விடை கிடைத்தது. அதுதான் நாட்டு மாடு.
நான் பிறந்தது முதல், அமெரிக்கா போகும்வரை தினம் தோறும் நான் குடித்து வந்தது நாட்டு மாட்டுப்பால், உணவில் சேர்த்து நாட்டு மாட்டு மோர், பருப்பு சாதத்தில் பிசைஞ்சு சாப்பிட்டது நாட்டு மாட்டு நெய். வேறு மாடுப்பாலை என் கண்ணுல கூட காட்டியதில்லை என் குடும்பத்தினர்.  பல வருஷமா நான்குடிச்சு வளர்ந்த நாட்டு மாட்டுப்பால்தான் நான் நோய் எதிர்ப்பு சக்தியுடன் விளங்கியதுக்கு காரணம் என்பதை என் வாழ்வில் நடந்த பல விஷயங்கள் உணர்த்திச்சு.


அதே சமயம், எனக்கு திருமணம் முடிஞ்சு குழந்தையும் பிறந்தது. நம்மளப்போலவே நம்ம குழந்தையும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கணும். அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலம் முக்கியம். அதுக்கு நாட்டு பசும்பால் அவசியம். ஆனா, அதற்கான வாய்ப்பு அமெரிக்காவில் இல்லை. அதுக்கு ஒரே வழி சொந்த மண்ணுக்கு திரும்புவதுதான். அதை என் மனைவி திவ்யாவிடம் சொன்னேன். அவரும் அதை மனம் உவந்து ஏற்றுக்கொண்டார். 
18 வருஷ அமெரிக்கா வாழ்க்கையை விட்டுட்டு, சொந்தமண்ணுக்கு வந்தோம். சிறுவயது முதல் நாட்டு மாட்டுப்பால் குடித்து வளர்ந்த என்னைபோலவே எனது இரண்டரை வயது மகன் தியான் நமச்சிவாயாவும் காங்கேயம் நாட்டுப்பசும்பால் தினமும் குடிக்கிறான். இப்ப எங்க குடும்ப பால் தேவைக்காக 7 நாட்டுப்பசு வெச்சு கறக்கிறோம்.  சரி..நமக்கு மட்டுமே நாடுப்பசும்பால் கிடைச்சா போதுமா? மற்றவங்களும் அதை பயன்படுத்தணும் என்கிற எண்ணத்தில் கோசாலை ஒண்ணை காங்கேயம் பக்கமுள்ள காடையூரில் ஆரம்பிச்சேன்.
லாரி ஏறி போக இருந்த நாட்டுமாடுகளையும், கப்பலேறிப்போக இருந்த கன்னுக்குட்டிகளையும் விலைகொடுத்து மீட்டு கொண்டுவந்து கோசாலையில்வைத்து பராமரித்து, அவைகளை நல்ல முறையில் வளர்த்த விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்கும், நாட்டு மாட்டின் மகிமை தெரிந்த ‘ஜீரோபட்ஜெட்’ விவசாயிகளுக்கும் அசல் விலைக்கே கொடுத்து வர்றேன். இதுவரைக்கும் மீட்டுவந்த நாட்டுமாடுகளை 137 பேருக்கு கொடுத்துள்ளேன். இப்ப கோசாலையில 34 மாடுகள் இருக்கு.

இதுபோக, கல்லூரிகள், ரோட்டரி மற்றும் ல்யன்ஸ் கிளப்புகள், தொழில் வர்த்தக சபைகள் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து நாட்டுமாட்டின் மகிமை குறித்த கருத்தரங்குகளில் பேசிவருகிறேன். அவைகளின் பெருமை சொல்லும் 1000க்கும் மேற்பட்ட விளக்கப்படங்களையும் (பவர் பாயின்ட்) திரையிட்டு விளக்கிபேசியும் வருகிறேன்.

‘வீட்டுக்கு ஒரு நாட்டு மாடு.......வியாதிக்கு பூட்டுப்போடு’’ என்கிற கொள்கையுடன் நாட்டுமாடு குறித்த பிரசாரத்தை நாடு முழுதும் எடுத்து செல்ல இருக்கிறேன் என்ற சிவக்குமார்‘ ஆயுர்‘ என்கிற பெயரில் மருத்துவம் சம்பத்தப்பட்ட நிறுவனம் ஒன்றை அங்குள்ள சில நண்பர்களுடன் இணைந்து நடத்திவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டுமாடுகளின் மகிமை குறித்து அறிந்த  டாக்டர் ராவ் மற்றும் அவரது மனைவி உமா ஆகிய அமெரிக்க வாழ் இந்தியத்தம்பதியர் வர்ஷா, விருஷா என்ற பெயரிட்டு இரண்டு நாட்டுமாடுகளை இவர் கோசாலையில் வளர்த்து வருகிறார்கள்.
அந்த மாடுகளை படம் எடுத்து அவ்வப்போது அவர்கள் பார்வைக்கு அனுப்பிவரும் சிவக்குமார், நாட்டு மாடுகளிலிருந்து அர்க், சோப், பல்பொடி, ஊதுவர்த்தி ஆகிய மதிப்புக்கூட்டிய பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியையும் விவசாயிகளுக்கு கொடுத்துவருகிறார்.

-;ஜி.பழனிச்சாமி
Vikadan

வியாழன், 30 அக்டோபர், 2014

30 பறவையின் வயிற்றில் மரங்களின் உலகம்!



பறவைகள், மரங்கள் தருகின்ற பழங்களைத் திண்பதோடு, மரக்கிளைகளில் கூடுகட்டி மரங்களைத் தங்கள் இருப்பிடமாக்கிக் கொள்கின்றன. பதிலுக்கு அவை மனிதர்கள் போலே 'தேங்க்ஸ்' என்று சொல்லிவிட்டு போய்விடுவதில்லை; அதற்கான நன்றியை வேறுவிதமாய்ச் செலுத்துகின்றன. 

பறவைகளைப் பாடாதா கவிஞனும் இல்லை; மரங்களைப் புகழாத புலவனும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பறவைகளும் மரங்களும் மனிதனிடத்தில் ஆழ்ந்த தொடர்பைக் கொண்டுள்ளன.

"சின்னஞ்சிறு பறவை போலே நீ திரிந்து பறந்து வா பாப்பா.
வண்ணப் பறவைகளைக் கண்டால் நீ மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா" 


விதைகளை பரப்புகின்ற அற்புதச் செயல்:


பாரதியின் இந்தப் பாட்டு பாப்பாவிற்கு மட்டுமல்ல, பாரில் உள்ள அனைவருக்கும்தான். பறவைகளைப் பார்த்து மகிழ்கிறோம்; பாடுகிறோம்; குதூகளிக்கிறோம். ஆனால் பறவைகளிடத்தில் நாம் கவனிக்காத அம்சங்கள் பல உள்ளன. அதில் ஒன்றுதான், மரங்களின் விதைகளை பரப்புகின்ற அற்புதச் செயல். ஆம்! தனக்கு உணவையும் உறைவிடத்தையும் தரும் மரங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் அவை தன் எச்சம் மூலம் விதைகளை ஆங்காங்கே இட்டுச் செல்கின்றன. 


நாவல், சீத்தா, இலுப்பை, கொடுக்காய் புளி, கொய்யா, சப்போட்டா போன்ற மரங்களிலிருந்து பழங்களைத் திண்ணும் பறவைகள் அதன் விதைகளை தான் செல்லும் இடங்களில் இடுகின்றன. மகிழம், செண்பகம் போன்ற பூ மரங்களின் கனிகளை 'புல்புல்' பறவைகள் விரும்பி உண்கின்றன்; வேப்பம்பழங்களை விரும்பி உண்ணும் காக்கைகள் மரம்நடும் தன்னார்வத் தொண்டர்களாகவே மாறிவிடுகின்றன. பறவைகளுக்குப் பிடித்த பழங்களான அரசு, ஆலம், அத்தி போன்றவற்றின் விதைகள் வெகுவாக பறவைகளால் பரப்பப்படுகின்றன.

நாம் செய்ய வேண்டியது என்ன?


பறவை இனம் விதைகளை ஆங்காங்கே பரப்பினாலும், அவற்றில் வளர்ந்து மரங்களாகும் விதைகள் சொற்பமே! சரியான சூழ்நிலையும் நீர் வசதியும் கிடைக்கும் விதைகள் மட்டுமே பல்வேறு பருவநிலைகளைத் தாக்குப்பிடித்து மரங்களாகின்றன. நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், துவங்கவுள்ள கோடை காலத்தில், தாகத்தில் தவிக்கும் பறவைகளுக்கு நமது சுற்றுப்புற இடங்களில் தண்ணீர் வைப்பதுதான். இப்படி வைப்பதால் பறவைகள் தாகத்தை தீர்த்த மகிழ்ச்சி ஒருபுறம் கிடைத்தாலும், பறவைகள் அங்கு விட்டுச் செல்லும் விதைகள் நம் நிலங்களில் மரங்களாகும். 


ஒரு மண் சட்டியிலோ அல்லது சிறிய குழியை வெட்டியோ பறவைகளுக்கான நீரை வைக்கும்போது அந்த இடத்தை நன்கு பக்குவப்படுத்தி வைத்தோமானால், அங்கு விழும் விதைகள் நன்கு வளர வாய்ப்புள்ளது. நமது கொல்லைப்புறங்களில் இதுபோன்று ஒரு இடத்தை உருவாக்க முடியும். சற்று பெரிய அளவில் நிலங்கள் உள்ளவர்கள் விதைகளைச் சேகரித்து தங்கள் நிலங்களில் நடலாம். அப்படி நடுவதற்கு நிலமோ நேரமோ இல்லாதவர்கள் விதைகளைச் சேகரித்து ஈஷா பசுமைக் கரங்களின் நாற்றுப் பண்ணைகளில் கொடுத்து விடலாம்.
ஈஷா பசுமைக் கரங்கள்


தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காக, சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் ஈஷா அறக்கட்டளைய, ஈஷா பசுமைக் கரங்கள் என்ற திட்டத்தின் மூலம் பல மகத்தான செயல்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஈஷா பசுமைக் கரங்கள், மண்ணிற்குத் தகுந்த மரக்கன்றுகளை மிகக் குறைந்த விலையில் வழங்கி வருகிறது. (1 மரக்கன்று - ரூ.5.00) 


ஈஷா பசுமைக் கரங்களுடன் உங்கள் கரங்களையும் இணைத்திடுங்கள். உங்கள் ஊரின் அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளின் விதைகளைக் கொண்டு சேர்ப்பதற்கும், குறைந்த விலையில் பல அரிய வகை மரக்கன்றுகளைப் பெறுவதற்கும் 94425 90062 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1086008

புதன், 13 ஆகஸ்ட், 2014

29 ஐ.டி. இளைஞர்களின் விவசாயப் புரட்சி

கோபி, ஒருங்கிணைப்பாளர், ஆர்கானிக் பார்மர்ஸ் மார்க்கெட்

ஐ.டி. வேலை என்றால் கை நிறைய சம்பளம், வெளிநாட்டில் ஆன் ஸ்பாட் வேலை, சொகுசு வாழ்க்கை... இப்படித்தான் நம்மில் பலரும் கற்பனை செய்துகொள்கிறோம்.
ஆனால், கலப்பை பிடித்து ஏர் உழும் ஐ.டி. இளைஞர்களைப் பார்த்திருக்கிறீர்களா? இருக்கிறார்கள். அதிலும் வேதி விவசாய அலையில் அடித்துச் செல்லப்படாமல், இயற்கை விவசாயம் என்ற சவாலைத் தைரியமாக எதிர்கொண்டு மேலேறி வரும் இவர்களது முயற்சிகள், நிச்சயம் வழக்கமானவை அல்ல.
விண்மீன் கூட்டத்தில் தனியாகத் தெரியும் துருவ நட்சத்திரம் போல அப்படி சிலர் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கமலக்கண்ணன்,
திரு.நம்மாழ்வார் இயற்கை அங்காடி, ஊரப்பாக்கம்:
“ஆரோக்கியக் குறைபாடு, மருந்துகளுக்குச் செய்த செலவு, சாப்பாட்டில் சுவையின்மை... இப்படிப் பல விஷயங்கள் எப்படி ஏற்பட்டுச்சுன்னு தேட ஆரம்பிச்சேன். அப்போ இயற்கை, செயற்கை விவசாயம் பற்றி தெரியவந்தது. கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை வேளாண் பொருட்களைப் பயன்படுத்திய போது மாற்றத்தை உணர முடிந்தது. என் மனைவியும் குடும்பத்தினரும் இதைப் ஒப்புக்கொள்ள ஆரம்பிச்சாங்க. மத்தவங்களுக்கும் இதை பரப்பணும்னு அதிகப் பொருட்களை வாங்கி சிறிய கடையா ஆரம்பிச்சேன்.
எனக்கு உத்வேகமாக இருந்தது மறைந்த நம்மாழ்வார்தான். கரூரில் உள்ள அவருடைய ‘வானகம்’ அமைப்பில் பயிற்சி எடுத்துக்கிட்டேன். நவீன வாழ்க்கை வாழவேண்டும் என்று விரும்புறதைவிட ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேணும்னு நினைப்பவர்களே, இந்தத் துறையில் வெற்றிபெற முடியும். நான் பகுதி நேரமாக இந்த வேலையைச் செய்தாலும், மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
எளிமையான வாழ்க்கை வாழ்வதற்குப் பெற்றோர்களும் கல்விக்கூடங்களும் கற்றுத்தரும் போதுதான் முழுமையான மாற்றம் உருவாகும்."
ஸ்ரீராம் - கயல்,

www.vaerorganic.com உரிமையாளர்கள்:
“இயற்கையான முறையில் மக்களுக்குப் பயன்படும் தொழிலைச் செய்ய வேண்டும் என்பது என்னுடைய, என் கணவருடைய கனவு. அது மனநிறைவு தரும் விஷயமாகவும் இருக்கணும்னு நினைச்சோம். அந்த நேரத்துல தென்காசில ஒரு இயற்கை விவசாயியைப் பார்க்கிற வாய்ப்பு கிடைச்சது. இருபது வருஷமா இயற்கை விவசாயம் செய்து வரும் அவர், நோய்களை எதிர்கொள்ள இயற்கை வேளாண் உணவு எப்படி உதவுச்சுன்னு சொன்னார். அதுல ஈர்க்கப்பட்டுத்தான், ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஆன்லைனில் இந்தக் கடையை ஆரம்பிச்சோம்.
நாங்க அமெரிக்காவில் வேலை செய்தப்போ கிடைச்ச வருமானம் இதுல கிடைக்கலை, இருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்கிறோம்ங்கிற மனநிறைவு, நிச்சயமா வருமானத்தைவிட பெருசுதான். இதுலதான் தன்னிறைவும் சந்தோஷமும் கிடைக்குது."
பார்த்தசாரதி,
இயற்கை விவசாயி:
"ஐ.டி. வேலை பார்த்தப்போ ஒரு லட்சம் சம்பளம் வாங்கினாலும், அது போதுமானதா இல்லை. என்னதான் படிச்சாலும், நல்ல சாப்பாடு கிடைக்கணுமே. இயற்கை வேளாண்மையின் பயனும், மகத்துவமும் ஐ.டி. துறைல இருந்தவரைக்கும் தெரியலை.
என்னோட தேவைக்காக இயற்கை விவசாயிகளிடம் உணவுப் பொருட்களை வாங்க ஆரம்பிச்சப்போ அதிக சுவையும், ஆரோக்கியமான வாழ்க்கையும் கிடைச்சுது. முன்னாடி இருந்த மருத்துவச் செலவும் அப்போ இல்லை.
முதல்ல பகுதி நேரமாகச் செய்தேன், இப்போ முழுசா இயற்கை விவசாயத்துல இறங்கிட்டேன். பி.இ., எம்.பி.ஏ. படிச்சுட்டு விவசாயம் பண்ணணுமான்னு வீட்ல வருத்தப்பட்டாங்க. ஆனா, காலப்போக்குல இயற்கை வேளாண் உணவு வகைகளைச் சாப்பிட்டபோது, திருப்தியா உணர்ந்தாங்க. இப்போ ரொம்ப சப்போர்ட்டிவா இருக்காங்க.
என்னோட தேவைகள் இப்போ மாறிடுச்சு. ஒரு ஏக்கர் இருந்தா போதும், குடும்பத்தைக் காப்பாத்திடலாம். எனக்குத் தேவையான உணவு பொருட்களை நானே உற்பத்தி செய்கிறேன்.
இயற்கை விவசாயம் செய்வதால இயற்கைக்கு ரொம்ப பக்கத்துல இருக்கிற மாதிரி உணர முடியுது."

கோபி, ஒருங்கிணைப்பாளர், ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட்:
"இயற்கை வேளாண் உணவு வகைகளைச் சாப்பிட்டப்போ அதோட வித்தியாசத்தை உணர்ந்தேன். சுறுசுறுப்பு அதிகரிச்சுது. இளைஞர்கள் சாப்பிடும் சாப்பாட்டுல என்ன சேர்க்கப்படுது, எப்படித் தயாராகுதுன்னு தெரிஞ்சுக்கிட்டாலே, இயற்கை வேளாண் உணவின் முக்கியத்துவம் புரிந்துவிடும். பத்தோடு பதினொண்ணா வேலை பார்த்துக்கிட்டிருந்த நான், இன்னைக்கு இயற்கை வேளாண் துறைல ஈடுபடுறதுல பெருமைப்படுறேன். ஐ.டி. துறைல சம்பளம் அதிகமாக இருந்தாலும், எனக்குப் பிடிச்ச வேலையைச் செய்றதுல மனநிறைவு கிடைக்குது."
இயற்கை வேளாண் அறிஞர் மசானபு ஃபுகோகாவுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி, அவர் செயல்படுத்திக்காட்டிய இயற்கை விவசாயத்தை மதிப்பதும், அதன் மூலம் விளைந்த பொருட்களை
வாங்கிப் பயன்படுத்துவதும்தூன். அதைக் களத்திலேயே செய்துகாட்டும் இந்த ஐ.டி. இளைஞர்கள், ஐ. போன் காலத்திலும் புதிய பாதையை வகுப்பவர்களாக இருக்கிறார்கள்.

http://tamil.thehindu.com/